SPONSER

Wednesday, 1 February 2017

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் அரசியல் வேண்டாம்: மாணவர்களிடம் கூறிய போலீஸ் அதிகாரிக்கு சிக்கல்

சென்னை:
தமிழகத்தில் இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்பதற்காக, பல்வேறுவிதமான மல்லுக்கட்டு நடந்தது. மாணவர்கள்; இளைஞர்கள் எழுச்சியுடன் கிளம்பி வந்து, சென்னை, மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தி, உலகத் தமிழர்களை தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தனர். இதையடுத்து, தமிழக அரசு, ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு சிறப்பு அவசர சட்டத்தை இயற்றியது. ஆனாலும், அது போதாது என மாணவர்கள் கொடிபிடிக்க, பொறுமை இழந்த காவல்துறை, அவர்களுக்கு எதிராக லத்தியை சுழற்றியது.இந்த விவகாரத்தில், சென்னை, மயிலாப்பூர் காவல்துறை துணை ஆணையராக இருக்கும் பாலகிருஷ்ணன், தேவையில்லாமல் சிக்கிக் கொண்டு தவிக்கிறார். அவரை அரசியலுக்குள் நுழைத்து, எதிர்கட்சியான தி.மு.க., வம்பு செய்வதாக, காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அவ்வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:
ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்த மெரினா கடற்கரை, மயிலாப்பூர் சரக காவல் எல்லைக்குள் வருகிறது. அதனால், துவக்கம் தொட்டு, இப்பிரச்னை விசுவரூபமெடுத்து, அரசுக்கு சிக்கல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில், மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன், ஆர்வமாக இருந்து செயல்பட்டார்.
போராட்டம் நடந்த ஆறு நாட்களும், அவர், பெரும்பாலான நேரம், சென்னை, மெரினா கடற்கரையில்தான் இருந்தார். மாணவர்களோடும்; இளைஞர்களோடும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே இருந்தார். தமிழக அரசும்; மத்திய அரசும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு எடுக்கும் அத்தனை முயற்சிகளையும் பட்டியல் போட்டுச் சொல்லி, போராட்டக் களத்தில் இருந்து மாணவர்களை கலைந்து செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.


மாணவர்களிடம் கரிசனம்:
ஆறு நாட்களுக்குப் பின், ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த இருந்த தடை நீக்கப்பட்டப்பின்னும், மாணவர்கள், மெரினாவில் இருந்து கலைந்து செல்ல மறுக்க, போலீஸ் உயரதிகாரிகள், அங்கு குவிந்து, அவர்களை விரட்டி அடிக்க முயன்றனர். அப்போது கூட, துணை ஆணையர், மாணவர்கள் மீது எவ்வித கடும் நடவடிக்கையும் வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இருந்தும், வன்முறையாளர்கள் சிலர், மாணவர்கள்; இளைஞர்களோடு ஊடுருவி, போலீசையும், பொதுமக்களையும் தாக்க, பிரச்னை வேறு திசை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. போலீசுக்கு வேறு வழி தெரியவில்லை. போராட்டக்காரர்களை நோக்கி, லத்தியை சுழற்றியது.இந்நிலையில், அடுத்து நடக்கவிருந்த குடியரசு தின விழாவை சீர்குலைக்கத் திட்டமிட்டு, சில சமூக விரோதிகள், மாணவர் போராட்டத்தை நிறுத்தவிடாமல் செய்ததாக, அரசுக்கு ஆதாரப்பூர்வமாக கிடைத்த தகவலை வைத்தே, மாணவர்களையும்; இளைஞர்களையும், மெரினாவில் இருந்து போலீசார் விரட்டி அடித்தனர்.


எதிர் கருத்து:
இருந்தபோதும், இந்த பிரச்னைக்கு காரணமானவர்கள் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் பன்னீர்செல்வம், மாணவர்கள் போராட்டம் மூலமாக, குடியரசு தின விழாவை சீர்குலைக்க, சிலர் முயன்றனர். அந்த முயற்சியை முறியடிக்கவே, தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டியானது என சட்டசபையில் கூறினார். ஆனால், ஊடகங்களுக்கு பேட்டியளித்த துணை கமிஷனர் பாலகிருஷ்ணன், இந்த கருத்து நேர் எதிரான கருத்துக்களை கூறினார். மாணவர்கள் போராட்டம் மூலமாக, குடியரசு தின விழாவை சீர்குலைக்க யாரும் முயற்சித்தனர் என போலீசுக்கு எவ்வித தகவலும் இல்லை என கூறினார்.
இதனால், முதல்வர் பன்னீர்செல்வம் கருத்துக்கு எதிரான கருத்தை பாலகிருஷ்ணன் கூறியதாக, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு கிளம்பியது. ஏற்கனவே, மாணவர்கள் போராடிய போது, அவர்களிடம் பேசிக் கொண்டிருந்த துணை கமிஷனர் பாலகிருஷ்ணன், இந்த விவகாரத்தில் எந்த அரசியல் தலையீடுகளும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என அழுத்தி அழுத்தி கூறியிருந்தார். இந்த விவரங்கள் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு வந்தது. இருந்தும், அதை புறக்கணித்து விட்டு, மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவளிக்க நேரில் சென்றார். ஆனால், அதை அவர்கள் ஏற்கவில்லை.

இதற்கு காரணமே, மாணவர்களை, தி.மு.க.,வுக்கு எதிராக தூண்டி விட்டது பாலகிருஷ்ணன் தான் என, அக்கட்சியினர் கோபம் அடைந்தனர். இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, முதல்வர் கருத்துக்கு எதிரான கருத்துப் போல பாலகிருஷ்ணன், டி.வி.,க்கு அளித்த பேட்டியில் கூறியதும், அதை வைத்து, சட்டசபையில் கேள்வி எழுப்பி, இது தொடர்பாக விரிவாக விசாரித்து அறிக்கை அளிப்பர்; அதை சட்டசபையில் சமர்ப்பிப்பேன் என முதல்வர் சொல்லக்கூடிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டது. உரிய அதிகாரிகள் அனுமதியின்றி, காவல் துறை சீருடையில், பாலகிருஷ்ணன் பேட்டி அளித்தது, போலீஸ் அடிப்படை விதிகளுக்கு மாறான செயல் என்பதால், பாலகிருஷ்ணனுக்கு, நிர்வாக ரீதியில் கடும் சிக்கல் ஏற்படும் என தெரிகிறது. இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் கூறின.

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...