SPONSER

Wednesday, 4 January 2017

ஜல்லிக்கட்டு விவகாரம்: தி.மு.க., மீது வீண் பழி; ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஜல்லிக்கட்டு விவகாரம்: தி.மு.க., மீது வீண் பழி; ஸ்டாலின் குற்றச்சாட்டு


மதுரை, :"ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தி.மு.க., மீது மத்திய அரசு வீண் பழி சுமத்துகிறது," என பொருளாளர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, மதுரை மாவட்டம் அலங்காநல்லுாரில், தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ., மூர்த்தி, தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் ஸ்டாலின் பேசியதாவது: தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, தி.மு.க., தொடர்ந்து போராடுகிறது. மத்திய அரசு கேட்டுக்கொண்டதால் ஏற்கெனவே அறிவித்த போராட்டம் தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
அ.தி.மு.க.,வும் கண்டுகொள்ளவில்லை. 2010ல் தி.மு.க., ஆட்சியின் போது, ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. 

அவசர சட்டம் கொண்டு வரலாம்


ஆனால் சட்டஆலோசனை பெற்று நிபந்தனையுடன் நடத்தப்பட்டது. 2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் உச்ச நீதிமன்றம், நடைமுறையை பின்பற்றாததால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது.

அப்போதைய நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, 'மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வரலாம்,' என கருத்து தெரிவித்தார். ஆனால், 50 லோக்சபா உறுப்பினர்களை வைத்துள்ள மாநில அரசு, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக காங்., கூட்டணியில் இருந்த தி.மு.க., மீது பழிசுமத்துகிறது.

அ.தி.மு.க., 2011ல் ஆட்சிக்கு வந்தவுடன் 110 விதியின்கீழ் ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதில், மதுரையில் 100 கோடி ரூபாயில் தமிழன்னை சிலை வைக்கப்படும் என்றது. அதுதொடர்பாக இடம் கூட தேர்வு செய்யப்படவில்லை. ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என 2015ல்
அ.தி.மு.க., அறிவித்தும் இதுவரை எவ்வித சட்ட ரீதியான முயற்சியும் எடுக்கவில்லை. அலட்சியமாக இருந்து விட்டு தற்போது தி.மு.க., மீது மத்திய, மாநில அரசுகள் பழி சுமத்துகின்றன.

தமிழர்களின் உணர்வை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். இன்னும் 11 நாட்களே உள்ள பொங்கல் விழாவில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தி.மு.க., துணை நிற்கும் என்றார்.

காங்., முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சனநாச்சியப்பன், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...