SPONSER

Thursday, 12 January 2017

சவாலை ஏற்க தயாரா?: பொங்கலை விட பொங்கும் தமிழக அரசியல்வாதிகள்

சவாலை ஏற்க தயாரா?: பொங்கலை விட பொங்கும் தமிழக அரசியல்வாதிகள்


சென்னை: தமிழகத்தில் ஆண்டுக்கு ஒரு முறை சில சம்பிரதாய நிகழ்வுகள் நடந்தோறும். தற்போது அந்த பட்டியலில் ஜல்லிக்கட்டும் சேர்ந்து விட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மத்தியில் காங்., தலைமையிலான தி.மு.க., இடம் பெற்ற ஐ.மு.கூட்டணி அரசால் தான் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனது என்பது நிதர்சனமான உண்மை. அப்போதைய மத்திய சுற்றுசூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், காளைகளை காட்சி விலங்குகள் பட்டியலில் சேர்த்தது தான் இவ்வளவு பிரச்னைக்கும் காரணம். இதன் பிறகு தான் சுப்ரீம் கோர்ட், பிரச்னைக்குள் புகுந்து ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து விட்டது. இப்பிரச்னை தீர, காட்சி விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்க வேண்டும். இதற்கு பார்லிமென்ட்டில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
அவசர சட்டம் :

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இப்போது போலவே ஜல்லிக்கட்டு நடக்குமா, நடக்காதா என்ற பிரச்னை காணப்பட்டது. தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையாக பொங்கினர். அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கடிதம் மேல் கடிதம் எழுதினார். தி.மு.க., தலைவர் கருணாநிதி அவசர சட்டம் வேண்டும் என கோரினார்.

ஆனால், மோடி தலைமையிலான மத்திய அரசு, காட்சி விலங்குகள் பட்டியலில் இருந்து விலக்கு அளித்து ஒரு அரசாணையை கொண்டு வந்து நிலைமையை சமாளிக்க பார்த்தது. அதை சுப்ரீம் கோர்ட் எளிதாக தள்ளுபடி செய்து, ஜல்லிக்கட்டை நடத்த விடாமல் பார்த்து கொண்டது. அதன் பிறகு ஒரு ஆண்டு கடந்து விட்டது. சென்னை மழை வெள்ளம் பாதிப்பு, முதல்வர் ஜெயலலிதா மரணம், தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல் நலம் பாதிப்பு, தி.மு.க., செயல் தலைவராக ஸ்டாலின் நியமனம், வர்தா' புயல் பாதிப்பு, முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்பு, அ.தி.மு.க., பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்பு என ஏராளமான சம்பவங்கள் நடந்து விட்டன.

மீண்டும் அரங்கேற்றம்:

இந்த சம்பவங்கள் நடந்த போதெல்லாம் ஜல்லிக்கட்டு பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால், 2016 டிசம்பர் முதல் மீண்டும் ஜல்லிக்கட்டு பிரச்னை வெடிக்க தொடங்கி விட்டது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் காரசார அறிக்கைகள்; தனியார் டிவி' சேனல்களில் பல மணி விவாதங்கள், மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று கோபாவேச பேச்சுகள்... என கடந்த ஆண்டு நடந்த அனைத்து சம்பவங்களும் மீண்டும் நடந்தேறி வருகின்றன. ஆனால், பலன் தான் இல்லை. ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில், பொங்கல் பண்டிகைக்கு முன் தீர்ப்பு வழங்க முடியாது; இப்போது தான் தீர்ப்பு எழுதி வருகிறோம்' என, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இன்று(ஜ.,12) தெளிவாக கூறி விட்டனர். எனவே, இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு கிடையாது என்பது தெளிவாகி விட்டது.

கொந்தளித்த அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாம், பொங்கல் பண்டிகைக்கு பிறகு, காணாமல்' போய் விடுவர்; ஜல்லிக்கட்டை அனைவரும் மறந்து விடுவார்கள். இதே போன்ற மாநிலம் தழுவிய ஒரு பிரச்னை என்றால், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில், கட்சி தலைவர்கள் ஜாதி, மத, கட்சி பேதம் இன்றி ஒன்று சேர்ந்து மத்திய அரசுக்கு தொடர் நெருக்கடி கொடுத்து காரியத்தை சாதித்து விடுவார்கள். ஆனால், தமிழகத்தில்...

ஒற்றுமை் இல்லை:

தனித்தனியாக போராட்டம்; தனித்தனியாக பேட்டிகள், அறிக்கைகள்; மதுரையை மையப்படுத்தி தனித்தனியாக போராட்டங்கள் என, தமிழக கட்சி தலைவர்களின் சம்பிரதாய நிகழ்வுகள், இப்போதும் செம்மையாக நடந்தேறி வருகின்றன. இந்த விஷயத்தில், சத்தம் போட்டு பேசி எந்த பலனும் இல்லை. ஜாதி, மத, கட்சி பேதம் இன்றி அனைவரும் ஒன்று சேர்ந்து, ஒரே குரலில், ஒரே எண்ணத்தில் பேசவும் வேண்டும்; செயலாற்றவும் வேண்டும். இந்த சவாலுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தயாரா... இல்லை, இந்த ஆண்டும் மக்களை ஏமாற்ற தான் போகிறார்களா?

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...