SPONSER

Thursday 15 December 2016

சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப...ஒரு வாரமாகும்! புயல் நிவாரண பணியில் அரசு தீவிரம்

சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப...ஒரு வாரமாகும்! புயல் நிவாரண பணியில் அரசு தீவிரம்:

சென்னை: 'வர்தா' புயல் ஏற்படுத்தி சென்ற கடும் பாதிப்பில் இருந்து, சென்னை மாநகரம் முழுவதுமாக இயல்பு நிலைக்கு திரும்ப, ஒரு வாரம் ஆகும்; புயல் நிவாரண பணிகளில், அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த, 12ம் தேதி, 'வர்தா' புயல், சென்னையைத் தாக்கியது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் சரிந்தன. போக்குவரத்து முற்றிலும் முடங்கியது; பாதுகாப்பு கருதி, மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. 
சென்னை உட்பட, பல மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டன. புயல் காரணமாக, சென்னையில், ஐந்து பேர்; காஞ்சிபுரத்தில், நான்கு பேர்; திருவள்ளூரில், ஐந்து பேர்; விழுப்புரம் மற்றும் நாகப்பட்டினத்தில், தலா ஒருவர் என, மொத்தம், 16 பேர் இறந்துள்ளனர்.
சாலைகளில் விழுந்த மரங்கள், சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு, சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மரங்களை, கிடங்குகளுக்கு கொண்டு செல்ல, வாகனங்கள் போதிய அளவில் இல்லை.
மரங்களின் கிளைகள், சாலைகளில் குவியல் குவியலாக வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் இலைகள், அழுக துவங்கி இருப்பதால், துர்நாற்றம் வீசி வருகிறது. தொற்றுநோய் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அமைச்சர் குழுமரங்களை அகற்றுதல் மற்றும் துப்புரவு பணிகளில் மட்டும், 18 ஆயிரம் பேர், சென்னை மாநகராட்சி பணியாளர்கள், இதர மாநகராட்சி, நகராட்சி பணியாளர்கள், 2,000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மரம் அகற்றும் பணியில், 295 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 144 ஜே.சி.பி., இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 
சென்னையில், புதைமின் வடங்கள் இருப்பதால், பெரிய அளவில் பிரச்னை இல்லை. புறநகரில், மின்கம்பங்கள் அதிகளவில் விழுந்துள்ளன. அவற்றை சீரமைக்கும் பணியில் மின் துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 
மழையால், 266 இடங்களில், தண்ணீர் தேக்கம் ஏற்பட்டது. இவற்றில், 90 சதவீத இடங்களில், மழைநீர் அகற்றும் பணிகள் முடிந்துவிட்டன. புயல் பாதிப்பில் இருந்து மீண்டு, சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப, ஒரு வாரம் ஆகும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னையில், புயல் நிவாரண பணிகளுக்காக, மின் துறை அமைச்சர் தங்கமணி தலைமையில், ஏழு அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 
இக்குழுவினர், மாநகராட்சி கமிஷனர், சென்னை மாநகராட்சியின், 15 மண்டலங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், மண்டல அலுவலர்கள், துறை தலைவர்கள் ஆகியோருடன், மீட்பு பணிகள் குறித்து, நேற்று, ரிப்பன் மாளிகையில் ஆலோசனை நடத்தினர். 
கூட்டத்தின் முடிவில், மின் துறை அமைச்சர் தங்கமணி அளித்த பேட்டி: வர்தா புயல் தாக்குதலால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சென்னையில், படிப்படியாக நிலைமை சீராகி வருகிறது. 
15,000 மின்கம்பங்கள்இதுவரை, 60 சதவீதம், மின்சார சேவை வழங்கப்பட்டுள்ளது. சூறாவளியில், 40 மின்சார கோபுரங்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால், மின் வினியோகத்தை சீரமைக்கும் பணிகளில், தொய்வு ஏற்பட்டது. இன்று (நேற்று) மாலைக்குள், சென்னையின் மைய பகுதிகளில், மின் சேவை முழுமையாக கிடைக்கும். 
விரிவாக்க பகுதி மண்டலங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில், ஏராளமான மின்கம்பங்கள் மீட்கப்படாமல் இருக்கின்றன. புறநகரில், மின் வினியோகம் முழுமையாக சீரடைய, மூன்று தினங்கள் ஆகும்.
சென்னை மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து, மொத்தம், 9,000 பணியாளர்கள், மின் வினியோகத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வர்தா புயலுக்கு, ஒட்டுமொத்தமாக, மூன்று மாவட்டங்களில், 15 ஆயிரம் மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. போதிய இருப்பு இருப்பதால், அந்த கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. 
மின் வினியோகம் பாதிப்பால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, அனைத்து நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்துகளில், ஒரு ஜெனரேட்டர் ஏற்பாடு செய்து, மேல்நிலை தொட்டிகளுக்கு நீரேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார். 
நிறுவனங்கள் மீது நடவடிக்கை? 'வர்தா' புயல் தாக்குதலால், மின் வினியோகம் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த மூன்று நாட்களாக, தொலை தொடர்பு சேவை, முழுமையாக முடங்கிக் கிடக்கின்றன. இது குறித்து, அமைச்சர் தங்கமணி கூறியதாவது: 
தனியார் தொலை தொடர்பு சேவையில், பாதிப்பு இருப்பது உண்மை தான். அந்த நிறுவனங்களிடம், சிக்னல் கோபுரங்களுக்கு, ஜெனரேட்டர் மூலம் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, முதல்வர் அறிவுறுத்தி இருந்தார். 
அவர்கள், எந்த முன் ஏற்பாடும் செய்யாததால், பிரச்னை ஏற்பட்டுள்ளது. இன்று, முதல்வர், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு, சில அறிவுரைகளை வழங்கி உள்ளார். நிலைமை, இன்று முழுமையாக சீராகும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

x

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...